Sample எடுத்து ஒருத்தன் போடுறது கணிப்பு… அஞ்சரை கோடி மக்கள் போட்டதுதான் உண்மையான ‘தீர்ப்பு’! கணிப்பு வேணும்னா முன்னாடி வரலாம், ஆனா மக்கள் தீர்ப்புதான் என்னிக்கும் பின்னாடி நிக்கும்!

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து, பல்வேறு தனியார் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் தமிழக மக்களிடையே பெரும் விவாதத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளன. சுமார் 5.5 கோடி மக்கள் வாக்களித்துள்ள நிலையில், வெறும் 40,000 முதல் ஒரு லட்சம் வரையிலான நபர்களிடம் மட்டுமே எடுக்கப்படும் இந்த சாம்பிள் சர்வேக்கள் முழுமையான மக்கள் தீர்ப்பை பிரதிபலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பெரும்பாலான கணிப்புகள் திமுக 145 முதல் 160 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கூறினாலும், ஆக்சிஸ் மை இந்தியா போன்ற நிறுவனங்கள் தமிழக வெற்றிக் கழகம் 120 இடங்கள் வரை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும், ஜேவிசி நிறுவனம் அதிமுகவிற்கு 147 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் நேர்மாறான கணிப்புகளை வழங்கியுள்ளன. இந்த முரண்பாடுகள் எக்ஸிட் போல் முடிவுகளின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களை வலுப்படுத்துகின்றன.

சமூக வலைதளங்களில் தற்போது ஒருபுறம் திமுக ஆதரவாளர்கள் ‘திராவிடம் 2.0’ மற்றும் ‘முத்துவேல் கருணாநிதி ஆகிய நான்’ என வெற்றி முழக்கங்களை இப்போதே பதிவிட தொடங்கிவிட்டனர். மறுபுறம், ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனத்தின் தரவுகளை மட்டும் வைத்துக்கொண்டு தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதே ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் கணித்த பல முடிவுகள் பொய்த்து போனதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரு தொகுதிக்கு வெறும் 188 பேரிடம் மட்டுமே கருத்து கேட்டுவிட்டு, அதை ஒட்டுமொத்த தொகுதியின் முடிவாக அறிவிப்பது என்பது ஒரு சதுரங்க ஆட்டத்தின் சில நகர்வுகளை மட்டுமே பார்த்துவிட்டு வெற்றியாளரை தீர்மானிப்பது போன்றதாகும். இந்த தரவுகள் அனைத்தும் ஒரு தற்காலிகமான மனமகிழ்ச்சிக்கே தவிர, உண்மையான தீர்ப்பல்ல.

வாக்கு இயந்திரங்கள் மீதான புகார்களும், தேர்தல் முறைகேடு குறித்த அச்சங்களும் எப்போதும் போல இப்போதும் ஒலிக்கின்றன. ஒருவேளை தேர்தல் முடிவுகள் இந்த எக்ஸிட் போல் கணிப்புகளுக்கு மாறாக அமைந்தால், உடனே வாக்கு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்ப தொடங்கிவிடுவார்கள். ஆளுங்கட்சிக்கு சாதகமாக முடிவுகள் வந்தால் கொண்டாடுவதும், எதிராக வந்தால் தேர்தலையே குறை சொல்வதும் ஒரு வழக்கமான அரசியல் போக்காக மாறிவிட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கடந்த ஒரு மாதத்தில் காட்டிய வேகம் மற்றும் பிரச்சார உத்திகள் மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், அந்த தாக்கம் ஓட்டுகளாக மாறியுள்ளதா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். எக்ஸிட் போல் என்பது ஒரு வெறும் கணிப்பு மட்டுமே; அதுவே இறுதித் தீர்ப்பல்ல என்பதை மக்கள் உணர வேண்டும்.

பல தனியார் நிறுவனங்கள் தங்களது சொந்த அஜெண்டாக்களுக்காகவோ அல்லது விளம்பரத்திற்காவோ இத்தகைய தரவுகளை வெளியிடலாம். உண்மையான ஜனநாயகம் என்பது மக்களின் ஓட்டுகளில் ஒளிந்துள்ளது. எனவே, இந்த இடைப்பட்ட நாட்களில் வரும் வதந்திகளையும் கணிப்புகளையும் புறம் தள்ளிவிட்டு, மே 4-ம் தேதி மக்கள் வழங்கப்போகும் இறுதி தீர்ப்புக்காக காத்திருப்பதே விவேகமானதாகும். நல்ல சமுதாயத்தை உருவாக்க மக்களின் உண்மையான தீர்ப்பை மதிப்போம்.

Leave a Comment