கூகுள் நிறுவனத்தின் நிலநடுக்கத்தை கண்டறியும் அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது, இந்த அம்சம் வியர் ஓஎஸ் மூலம் அணியக்கூடிய சாதனங்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இது பற்றிய தகவல்களை ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி வெளியிட்டுள்ளது. அதன்படி விரைவில் வெளியாக இருக்கும் வியர் ஓஎஸ் வெர்ஷன் பயனர்களுக்கு நிலநடுக்கம் ஏற்பட போவதை முன்கூட்டியே எச்சரிக்கும்.
கடந்த ஆகஸ்ட் 2020 முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இடையில் இந்த அம்சம் பல்வேறு பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்பட்டது. அதன்படி 2023-ம் ஆண்டு முதல் இந்த அம்சம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. கூகுளின் நிலநடுக்கத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் அம்சம் வழக்கமான பிரத்யேக செய்ஸோமீட்டர்களை மட்டும் சார்ந்திருக்காமல் கூகுள் நிறுவனம் உலகம் முழுக்க பயன்பாட்டில் இருக்கும் கோடிக்கணக்கான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் மோஷன் சென்சார்களை பயன்படுத்தும்.
ஒரே பகுதியில் உள்ள பல்வேறு ஸ்மார்ட்போன்களில் நிலஅதிர்வு பதிவானால் கூகுள் சர்வர்கள் உடனடியாக அது நிலநடுக்கம் தானா என்பதை கண்டறிந்துவிடும். ஒருவேளை அது எச்சரிக்கை செய்யும் அளவுக்கு இருப்பின், கூகுள் அருகாமையில் உள்ள பயனர்களுக்கு குறிப்பிட்ட பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கும்.
இந்த எச்சரிக்கை தகவலில் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு மற்றும் பூமியில் இருந்து எத்தனை கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்படும் என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்று இருக்கும். சமயங்களில் சில நொடிகள் அல்லது நிமிடங்களுக்கு முன்பு செய்யப்பட்ட எச்சரிக்கைக் கூட மக்களுக்கு பெரிய அளவில் பாதுகாப்பை தேடிக் கொள்ள உதவியாக இருக்கலாம்.
தற்போது இந்த அம்சம் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன்படி விரைவில் பயனர்கள் தங்களது பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பின் அதுபற்றிய எச்சரிக்கை தகவலை தங்களது ஸ்மார்ட்வாட்ச்-இல் அதனை பெற முடியும். ஸ்மார்ட்போன் இல்லாமல் எல்டிஇ வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துவோருக்கு இந்த அம்சம் மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த எச்சரிக்கை தகவல் எப்படி காட்சியளிக்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இவை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருப்பதை போன்றே காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.