தமிழக அரசியல் களத்தில் மக்கள் பிரதிநிதிகளும், ஊடகவியலாளர்களும் சந்தித்து கொள்ளும் ‘செய்தியாளர் சந்திப்புகள்’ எப்போதுமே ஜனநாயத்தின் மிக முக்கிய கூறாக பார்க்கப்படுகின்றன. தற்போதைய புதிய அரசியல் சூழலில், மாற்று சக்தியாக உருவெடுத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள முதலமைச்சர் விஜய், ஏன் இன்னும் வழக்கமான பாணியில் பொதுவெளியில் பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேட்டி அளிக்கவில்லை என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுப்பப்பட்டு வருகிறது. “உங்கள் தலைவர் எப்போதுதான் செய்தியாளர்களை முறைப்படி சந்திப்பார்? இது என்ன மாதிரியான ஸ்டேட்டஜி?” என தவெக தரப்பினரை நோக்கி ஊடகங்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றன. தேர்தல் முடிந்து இத்தனை நாட்களாகியும் இந்த மௌனம் கலைக்கப்படாதது குறித்துப் பல்வேறு விவாதங்கள் தற்போதைய சமூக வலைத்தள விவாத மேடைகளில் அனல் பறக்கின்றன.
ஊடகங்களின் இந்தக் காரசாரமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தவெக தரப்பிலிருந்தும் அதன் ஆதரவு அரசியல் விமர்சகர்கள் தரப்பிலிருந்தும் மிகவும் தெளிவான, அதே சமயம் அதிரடியான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. “முதலமைச்சர் விஜய் எதற்கும் அஞ்சுபவர் அல்ல; அவர் ஏற்கனவே ‘என்டிடிவி’ போன்ற தேசிய ஊடகங்களுக்கு ஆஃப் தி கேமரா முறையில் மிகவும் தெளிவான நேர்காணல்களை வழங்கி தனது நிர்வாக தொலைநோக்கு பார்வையை தெளிவுபடுத்தியுள்ளார்” என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குறித்து தவெக தரப்பினர் பேசுகையில், “பத்திரிகையாளர் சந்திப்பு என்பது வெறும் கேமராக்களுக்கு முன்னால் நின்று கொண்டு, கேட்கப்படும் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை சொல்லிவிட்டு ஓடி போகும் ஒரு சடங்கு அல்ல” என்பதை மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களை நோக்கி நேர்மையான, உண்மையான கேள்விகளை கேட்க வேண்டியதுதான் ஒரு பத்திரிகையாளரின் பிரதான கடமையாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக தமிழகத்தின் தற்போதைய ஊடக சூழலில், ஒரு குறிப்பிட்ட தரப்புக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பை திட்டமிட்டு சிறுமைப்படுத்தவும் மட்டுமே சில கேள்விகள் உள்நோக்கத்துடன் தயாரிக்கப்படுகின்றன என்ற விமர்சனத்தையும் அவர்கள் முன்வைக்க தயங்கவில்லை.
“உண்மையான மற்றும் நடுநிலையான பத்திரிகையாளர் சந்திப்பு எப்போது நடக்கும் தெரியுமா? ஒரு உண்மையான பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு எப்போது தமிழ்நாட்டில் அரங்கேறுகிறதோ, அதற்கு அடுத்த நாளே எங்கள் முதலமைச்சர் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார்” என்று அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
இதன் பொருள், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும், ஆளுங்கட்சியின் வளர்ச்சியை தாங்க முடியாமல் கேட்கப்படும் உள்நோக்கம் கொண்ட கேள்விகளையும் தவிர்த்துவிட்டு, மாநிலத்தின் உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஊடகங்கள் எப்போது தயாராகிறதோ, அப்போது முதலமைச்சர் விஜய் கம்பீரமாக மேடையேறுவார் என்பதாகும்.
நிர்வாகப் பொறுப்பை ஏற்று இன்னும் சில வாரங்களே ஆகியுள்ள ஒரு புதிய முதலமைச்சருக்கு, அரசு இயந்திரத்தின் செயல்பாடுகளை முழுமையாக சீரமைப்பதற்குக் குறைந்தபட்ச கால அவகாசம் தேவை என்பதை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து, ‘ஏன் இன்னும் பிரஸ்மீட் வைக்கவில்லை’ என்று 24 மணி நேரமும் கூச்சலிடுவது அவர்களின் அரசியல் விரக்தியையே காட்டுகிறது. வெற்று விளம்பரங்களுக்காகவும், கேமரா வெளிச்சத்திற்காகவும் ஓடி ஓடிப் பேட்டி கொடுக்கும் தலைவராக விஜய் இருக்க விரும்பவில்லை; மாறாக, திரைக்குப் பின்னால் கோட்டைக்குள் கோப்புகளை ஆராய்ந்து, மக்களுக்குத் தேவையான நல்ல திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே அவர் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
முடிவாக, முதலமைச்சர் விஜய்யின் இந்த மௌனம் என்பது பலவீனம் அல்ல, அது அவரது நிர்வாக பணிகளுக்கான ஒரு தீர்க்கமான அமைதி என்பதை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். ஊடகங்கள் தங்களின் சுயநல அரசியல் லாபங்களுக்காக போடும் போலி புயல்கள் மக்களின் மத்தியில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எப்போது தமிழ்நாட்டு ஊடகங்கள் நடுநிலை தன்மையோடு, மக்கள் நலன் சார்ந்த கேள்விகளோடு வருகின்றனவோ, அன்று முதலமைச்சர் விஜய்யின் நேரடி பத்திரிகையாளர் சந்திப்பு மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் அப்படி ஒருநாள் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..