அனைத்து கட்சி கூட்டம் கூட்டி டீ, பிஸ்கட் சாப்பிட்டு டைம் வேஸ்ட் பண்ண மாட்டார் நம்ம முதல்வர் விஜய்.. காவிரிக்காக டைரக்டா சுப்ரீம் கோர்ட்டுக்கு போய்விட்டார்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் மதிக்கலை.. காவிரி ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் மதிக்கலை.. கர்நாடக அரசு பதில் சொல்லியே தீரணும்.. உண்மை நிச்சயம் ஜெயிக்கும்…

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தெளிவான உத்தரவுகளை கருத்தில் கொள்ளாமல், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை திறக்க மறுத்து வருவது தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் ஆணையங்களின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசின் போக்கை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதில் எத்தகைய சமரசத்திற்கும் இடமில்லை என்பதை உணர்ந்து, தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாகக் களமிறங்கியுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நேரடி அறிவுறுத்தலின் படியும், விவசாயிகளின் நலனை முன்னிறுத்தியும் கர்நாடக அரசின் சட்டவிரோதப் போக்கிற்கு எதிராக மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 28 அன்று நடைபெற்ற 139-வது காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில், பிலிகுண்டுலுவில் விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. தொடர்ந்து ஜூலை 30 அன்று நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 54-வது அவசரக் கூட்டத்திலும் இந்த முடிவு முழுமையாக உறுதி செய்யப்பட்டது.

ஆனால், ஆணையத்தின் இந்த உத்தரவுகளைப் பின்பற்றித் தண்ணீரைத் திறக்க வேண்டிய கர்நாடக அரசு, அதற்கு முற்றிலும் மாறாகச் செயல்பட்டுள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுக்குப் பிறகு, பிலிகுண்டுலுவில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 02 வரை வந்துசேர்ந்த நீரின் அளவு வெறும் விநாடிக்கு 158 முதல் 550 கன அடி மட்டுமே ஆகும். ஆணையம் நிர்ணயித்த அளவைக் காட்டிலும் மிகக் குறைந்த அளவே தண்ணீர் வந்துள்ளதன் மூலம், கர்நாடக அரசு திட்டமிட்டுத் தமிழ்நாட்டை ஏமாற்றி வருவது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதற்கிடையே, ஆகஸ்ட் 3 நிலவரப்படி கர்நாடகத்தின் கே.ஆர்.எஸ் அணையில் 23.078 டி.எம்.சி, கபினியில் 18.610 டி.எம்.சி, ஹேரங்கியில் 28.022 டி.எம்.சி மற்றும் ஹராங்கியில் 7.827 டி.எம்.சி என மொத்தம் 77.537 டி.எம்.சி அளவுக்குத் தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் பயன்பாட்டு நீர் இருப்பு மட்டுமே 67.517 டி.எம்.சி ஆக உள்ளது. அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருக்கும் பட்சத்தில், விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீரைத் திறந்து விடுவதில் கர்நாடக அரசுக்கு எந்த விதமான சிரமமும் இருக்க முடியாது.

மேலும், கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து நீர்வத்து அதிகரித்துள்ளதால், விகிதாச்சாரப்படி பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய நீரின் அளவே 26.954 டி.எம்.சி ஆகும். ஆனால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அளித்த உத்தரவானது வெறும் 4.536 டி.எம்.சி மட்டுமே என்றபோதிலும், அந்த குறைந்தபட்ச நீரையோ அல்லது முறையாகத் திறக்க வேண்டிய பங்கையோ வழங்காமல் கர்நாடக அரசு தொடர்ந்து வஞ்சகம் செய்து வருகிறது. தமிழக விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும், நமது உரிமையான காவிரி நீரை முழுமையாகப் பெற்றுத் தரவும் முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில் சட்டப்பேரவையிலும் நீதிமன்றத்திலும் தொடர்ச்சியான மற்றும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Comment