மேற்கு ஆசியாவில் ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்களில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்படம் உணவின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர்கள் போதிய உணவின்றி பசியால் வாடுவதாகவும் வெளியாகி இருக்கும் செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் நாளிதழ் ஒன்று வெளியிட்ட புகைப்படங்களில், துருப்புகளுக்கு மிக குறைந்த அளவிலான இறைச்சி மற்றும் உலர்ந்த ரொட்டிகள் வழங்கப்படுவது தெளிவாக தெரிகிறது. உலகின் வலிமையான ராணுவத்தை கொண்டுள்ள ஒரு நாடு, தனது வீரர்களுக்கு அடிப்படை தேவையாக இருக்கும் தரமான உணவை கூட வழங்க முடியாமல் திணறுவது சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வரும் பயனர்கள், இது உணவு கூடங்களில் மேஜைக்கு அடியில் கிடக்கும் மிச்சத்தை போல இருப்பதாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
யுஎஸ்எஸ் திரிப்போலி கப்பலில் பணியாற்றும் ஒரு வீரரின் தந்தை டான் எஃப் என்பவர், தனது மகள் கப்பலில் உணவை ரேஷன் முறையில் மிக குறைவாகவே உட்கொள்வதாக கவலை தெரிவித்துள்ளார். கப்பலில் புதிய காய்கறிகளோ அல்லது பழங்களோ அறவே இல்லை என்றும், அங்குள்ள காபி இயந்திரம் கூட பழுதாகிவிட்டதால் தனது மகளுக்கு ஆதரவாக தானும் காபி குடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.
அமெரிக்க ராணுவத்தின் மிகப்பெரிய பலமே அதன் வீரர்களை சிறப்பாக கவனித்து கொள்வதுதான், ஆனால் இப்போது எதிரிகளுக்கு முன்பாக தங்கள் வீரர்களை பசியுடன் வைத்திருப்பது ராணுவத்தின் கௌரவத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த தேவாலய போதகர் கரேன் எர்ஸ்கைன் என்பவரும், அமெரிக்க போர்க்கப்பலில் உள்ள வீரர்கள் எப்போதும் பசியுடனேயே இருப்பதாகவும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு சுவையற்றதாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
வீரர்கள் பசியால் வாடுவதை அறிந்த அவர்களது குடும்பத்தினர், உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உள்ளடக்கிய ‘கேர் பேக்கேஜ்’களை அனுப்பி வருகின்றனர். இதில் பிஸ்கட், தின்பண்டங்கள், சுகாதார பொருட்கள் மற்றும் புதிய உடைகள் போன்ற பொருட்கள் அடங்கும். ஆனால், அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஈரானுடன் நடந்து வரும் போர் காரணமாக, வான்வெளி மூடப்பட்டுள்ளதால் அஞ்சல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க அஞ்சல் துறை சுமார் 27 ராணுவ ஜிப் கோடுகளுக்கான சேவையை நிறுத்தி வைத்துள்ளதால், பாசத்துடன் அனுப்பப்பட்ட இந்த பொட்டலங்கள் வீரர்களை சென்றடையாமல் பாதியிலேயே முடங்கி கிடக்கின்றன. போர் எப்போது முடியும் என்பது குறித்த தெளிவற்ற சூழல் நிலவுவதால், இந்த தடை உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்சாஸை சேர்ந்த ஒரு தாய், தனது மகன் பசியால் வாடுகிறான் என்பதை அறிந்து சுமார் 2000 டாலர்கள் செலவு செய்து உணவு பொட்டலங்களை அனுப்பியுள்ளார். ஆனால், ஜப்பானில் இருந்து புறப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக போர்க்களத்தில் இருக்கும் அவரது மகனுக்கு இன்னும் அவை சென்றடையவில்லை. இதேபோல் மேரிலாந்து மற்றும் மசாசூசெட்ஸ் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சமூக ஆர்வலர்களும் ராணுவ வீரர்களுக்காக சிறப்பு நிதி திரட்டி பொருட்களை அனுப்பியும், அவை அஞ்சல் நிலையங்களிலேயே முடங்கி கிடக்கின்றன. சில இடங்களில் அஞ்சல் ஊழியர்கள் ராணுவ முகவரிகளுக்கு பொருட்களை பெற்றுக்கொள்ளவே மறுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது வீரர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் உருவாக்கியுள்ளது.
அமெரிக்க ராணுவ வரலாற்று ஆய்வாளர் ஸ்டீவ் கோசெர்ஸ்பெர்கர் கூறுகையில், அமெரிக்காவின் புரட்சி போர் காலம் முதலே போர்க்காலங்களில் அஞ்சல் சேவைகள் பாதிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றுதான் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது வான்வெளி மூடப்பட்டிருப்பதாலும், பிராந்திய போக்குவரத்து நிலைத்தன்மை இல்லாததாலும் அஞ்சல் விநியோகம் பெரும் சவாலாக உள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட பொட்டலங்கள் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன என்றும், நிலைமை சீரானவுடன் அவை விநியோகிக்கப்படும் என்றும் ராணுவ தரப்பு விளக்கம் அளித்துள்ளது. இருப்பினும், இரண்டு வார கால போர்நிறுத்தம் அமலில் உள்ள போதிலும், வீரர்களுக்கு சேர வேண்டிய அடிப்படை தேவைகள் முடக்கப்பட்டிருப்பது அமெரிக்க ராணுவ நிர்வாகத்தின் மீதான நம்பகத்தன்மையை குறைப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.