2026 தமிழகச் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 28 தொகுதிகளிலும் அவர்களை வீழ்த்தி, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவிடக் கூடாது என்பதே பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய பிரதான இலக்காக மாறியுள்ளது. டெல்லி பா.ஜ.க தலைமையின் இந்த அதிரடி திட்டம், வெறும் தேர்தல் வெற்றிக்கானது மட்டுமல்ல; இது 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒரு நீண்டகால அரசியல் வியூகமாகும். இப்போதே காங்கிரஸை தமிழகத்தில் பலவீனப்படுத்தினால் மட்டுமே, நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் திமுக அந்த கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்காது அல்லது கூட்டணியிலிருந்து கழற்றிவிடும் என்பது பா.ஜ.க-வின் கணக்காக உள்ளது.
தமிழகம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸை அரசியல் ரீதியாக துடைத்தெறிய வேண்டும் என்பதில் அமித்ஷா தலைமையிலான குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னைக்கு வந்திருந்தபோது, இந்த 28 தொகுதிகளின் முக்கியத்துவத்தை எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸின் தோல்வி என்பது பா.ஜ.க-வின் ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்ற கனவை நனவாக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இதற்காக களத்தில் தீவிரப்பிரசாரங்களை முன்னெடுப்பதுடன், தேவையான இடங்களில் மத்திய ஏஜென்சிகளின் அதிரடி நடவடிக்கைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒரு பலவீனமான கட்சியாக இருப்பதாக பா.ஜ.க கருதுகிறது. கடந்த காலங்களில் திமுகவின் தயவிலேயே காங்கிரஸ் வெற்றி பெற்று வருவதால், அந்த தொகுதிகளில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு காங்கிரஸை தனிமைப்படுத்த திட்டமிட்டுள்ளன. காங்கிரஸ் போட்டியிடும் இடங்களை குறிவைத்து பிரதமரின் ரோடு ஷோக்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் பொதுக்கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் காங்கிரஸை ஒரு வெற்றி பெற முடியாத கட்சி என்ற பிம்பத்திற்குள் தள்ளுவதே டெல்லியின் மாஸ்டர் பிளான்.
மேற்கு வங்கத்திலும் இதே போன்றதொரு நிலைப்பாட்டை பா.ஜ.க எடுத்துள்ளது. மம்தா பானர்ஜிக்கும் காங்கிரஸுக்கும் இடையே நிலவும் முரண்பாடுகளை பயன்படுத்தி, அங்கேயும் காங்கிரஸை ஜீரோ ஆக்க பகீரத முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. பிராந்திய கட்சிகளின் நிழலில் காங்கிரஸ் வளர்வதை ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்பதில் பா.ஜ.க உறுதியாக உள்ளது. ஒருவேளை தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் காங்கிரஸ் வீழ்ந்தால், அது தேசிய அளவில் அந்த கட்சியின் செல்வாக்கை முற்றிலுமாக சிதைத்துவிடும். இது 2029-ல் மோடிக்கு எதிராக ஒரு வலுவான எதிர்க்கட்சி தலைவரோ அல்லது கூட்டணியோ உருவாவதை தடுத்துவிடும்.
இந்த தேர்தல் களத்தில் மத்திய புலனாய்வு அமைப்புகளின் பங்கு முக்கியமானது என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். தேர்தல் நேரத்தில் காங்கிரஸின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களுக்கு நிதி ஆதாரமாக இருப்பவர்கள் மீது குறிவைக்கப்படலாம் என்ற பேச்சுகள் அடிபடுகின்றன. ஏற்கனவே மேற்கு வங்கத்தில் ஐ-பேக் நிறுவனத்தின் மீதான சோதனைகள் இத்தகைய அதிரடி நடவடிக்கைகளுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்திலும் காங்கிரஸுக்கு சாதகமான சூழலைச் சிதைக்க தேவையான அனைத்து அஸ்திரங்களையும் டெல்லி தலைமை தயார் நிலையில் வைத்துள்ளது.
இறுதியாக, 2026 சட்டமன்ற தேர்தல் என்பது ஸ்டாலினுக்கும் எடப்பாடிக்கும் இடையிலான போர் மட்டுமல்ல; அது காங்கிரஸின் இருப்பை தீர்மானிக்கும் ஒரு வாழ்வா-சாவா போராட்டமாகும். பா.ஜ.கவின் வியூகம் காங்கிரஸை நிலைகுலைய செய்யக்கூடும். காங்கிரஸ் இல்லாத இந்தியாவே பா.ஜ.க-வின் இலக்கு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவுகள் அமையுமா அல்லது தமிழக மக்கள் மீண்டும் கை சின்னத்திற்கு வாக்களிப்பார்களா என்பது மே மாதம் தெரிந்துவிடும்.