தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய நிதி போராக உருவெடுத்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களத்தில் இறங்கியுள்ளதால், அவரை சமாளிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கும் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளின் கரன்சிகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் செலவாகி வருகின்றன.
விஜய் தனது பொதுக்கூட்டங்களை ரத்து செய்வது அவரது நிர்வாகிகளின் பர்ஸை பதம் பார்க்கிறது என்றால், களத்தில் தவெகவின் இளைஞர் பட்டாளத்தை எதிர்கொள்ள திராவிட கட்சிகள் தங்களின் பூத் முகவர்களுக்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கும் கடந்த முறையை விட கூடுதல் தொகையை வாரி வழங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன. காசு கொடுத்து ஆள் சேர்ப்பதே குதிரை கொம்பாக இருப்பதாகச் சென்னை தேர்தல் பொறுப்பாளர்கள் புலம்புவது, விஜய்யின் வருகை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திற்கு ஒரு சான்றாகும்.
திராவிட கட்சிகளின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் மத்தியில் ஒருவிதமான பதற்றம் நிலவுவதை மறுக்க முடியாது. தவெக அபரிமிதமான வாக்குகளை பிரிக்கும் என்பதில் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த வாக்குகளைத் தவெக வெற்றியாக மாற்றுமா என்பதுதான் அவர்களின் கேள்வி. தற்போதைய கள நிலவரப்படி, திருச்சி கிழக்கு போன்ற தொகுதிகளில் விஜய்க்கு நேரடி வெற்றி வாய்ப்பு குறைவாக தெரிந்தாலும், தமிழகம் முழுவதும் சுமார் 50 தொகுதிகளின் வெற்றி – தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக தவெக உருவெடுத்துள்ளது.
குறிப்பாக சென்னையில் ஆர்.கே.நகர், அம்பத்தூர், தி.நகர், வேளச்சேரி மற்றும் மயிலாப்பூர் போன்ற நகர்ப்புற தொகுதிகளில் தவெக பிரிக்க போகும் வாக்குகள், தி.மு.க-வின் வெற்றிக் கனியை பறிக்கக் கூடும் என்கிற எதார்த்தமான அச்சம் ஆளுங்கட்சி வட்டாரத்தில் நிலவுகிறது.
இந்த சூழலைச் சமாளிக்கத் தி.மு.க தலைமை ஒரு இரட்டை வியூகத்தை வகுத்துள்ளது. கடைசி நேரத்தில் தாராளமாக நிதி ஆதாரங்களை இறக்கி, நடுநிலை வாக்குகளை தக்கவைக்க திட்டமிடப்படுகிறது. இருப்பினும், விஜய்யின் பால் ஈர்க்கப்பட்டுள்ள இளைஞர்களின் வாக்குகளை பணத்தால் மாற்றிவிட முடியாது என்பதை திமுக நன்கு உணர்ந்துள்ள்து,
பெண் வாக்காளர்களை கவர்வதில் தி.மு.க மற்றும் தவெக இடையே ஒரு மறைமுக போட்டி நிலவுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் வருகைக்கு பிறகு, தி.மு.க தனது பிரச்சார திட்டங்களையே மாற்றியமைத்துள்ளது. குடும்ப தலைவிகளுக்கான உரிமை தொகை மற்றும் இதர நலத்திட்டங்களை முன்னிறுத்தி, பெண்களின் ஆதரவை தக்கவைக்க வார்டு வாரியாகப் புதிய பிரச்சாரக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இறுதியாக, 2026 தேர்தல் என்பது பண பலத்திற்கும், மக்கள் செல்வாக்கிற்கும் இடையிலான ஒரு பலப்பரீட்சையாக அமையப் போகிறது.