ஒரு நல்ல சான்ஸை திமுக கோட்டைவிட்டுவிட்டது.. முதல்வர் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்து, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் விளக்கம் அளித்திருக்கலாம்.. ஆனால் முதல்வர் பேச தொடங்கியதில் இருந்தே அமளி செய்தால் கடுப்பான சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை.. நுணலும் தன் வாயால் கெட்டது போல் திமுகவினரே அவர்களுக்கான வாய்ப்பை கெடுத்து கொண்டார்களா?

முதல்வர் விஜய் பதில் உரையை தொடங்கிய நேரத்திலேயே திமுக உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்து முழு பேச்சையும் கேட்டிருந்தால், உரை முடிந்த பிறகு தங்களுக்கான கேள்விகளை முன்வைக்க நல்ல வாய்ப்பு இருந்ததாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் தொடக்கம் முதலே கூச்சல், எதிர்ப்பு, அமளி என அவை நடவடிக்கை நகர்ந்ததால், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பையே திமுக உறுப்பினர்கள் தவறவிட்டுவிட்டதாக விஜய் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

சட்டப்பேரவையில் ஆளும் தரப்பு மீது கேள்வி எழுப்புவதும், கடுமையாக எதிர்ப்பதும் எதிர்க்கட்சியின் இயல்பான அரசியல் உரிமைதான். ஆனால் அந்த எதிர்ப்பு எந்த வடிவத்தில் வெளிப்படுகிறது என்பதும் முக்கியம். முதல்வர் பேசும் நேரத்தில் தொடர்ந்து குறுக்கீடு செய்வதைவிட, அவர் முழுமையாக பேசி முடித்த பிறகு ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதில் அளிப்பதே அரசியல் ரீதியாக வலுவான அணுகுமுறை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் முக்கியமாக பேசப்படுவது, முதல்வர் விஜய் ஒரு சான்ஸ் கொடுங்கள் என்று சபாநாயகரிடம் கூறியயதாக சொல்லப்படும் தருணம்தான். அதாவது, எதிர்க்கட்சியினருக்கு தங்களுடைய விளக்கத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை முதல்வர் வெளிப்படுத்தியதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அப்படியிருக்கும்போது வெளிநடப்பு செய்தது ஏன் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

இதனால் திமுகவின் நடவடிக்கை எதிர்ப்பு அரசியலா அல்லது அரசியல் பதற்றத்தின் வெளிப்பாடா என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. முதல்வரின் பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில், அமளியில் கவனம் சென்றுவிட்டால், மக்களிடம் தங்களுடைய தரப்பு விளக்கத்தை கொண்டு செல்லும் வாய்ப்பே பாதிக்கப்படும். குறிப்பாக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட சூழலில், அவற்றை மறுத்து ஆதாரங்களுடன் பதிலளிப்பதுதான் எதிர்க்கட்சிக்கு அரசியல் ரீதியாக அதிக பலன் தரும்.

மேலும், ஒரு சட்டப்பேரவை விவாதம் என்பது வெறும் சத்தம் போட்டு எதிர்ப்பை பதிவு செய்வதற்கான இடம் மட்டுமல்ல. ஆளும் தரப்பிடம் கேள்வி கேட்பது, ஆவணங்களை முன்வைப்பது, குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்பது, மக்களின் பிரச்சினைகளை பதிவு செய்வது என பல்வேறு வாய்ப்புகள் அங்கு இருக்கின்றன. அந்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தாமல் வெளிநடப்பை தேர்வு செய்தால், அது யாருக்கு சாதகமாக முடியும் என்பதும் அரசியல் கணக்கில் முக்கியமான கேள்வியாகிறது.

இன்றைய சூழலில், “திமுக என்ன செய்யப் போகிறது?” என்ற கேள்வியை அந்தக் கட்சியின் எதிர்ப்பாளர்களைவிட அதன் சொந்த அரசியல் செயல்பாடுகளே எழுப்பும் நிலை உருவாகியுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். விஜய் தொடர்ந்து நேரடியாக சவால் விடுக்கும் நிலையில், அதற்கு அமைதியாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பதிலளிக்கிறதா, அல்லது ஒவ்வொரு முறையும் அமளி மற்றும் வெளிநடப்பை தேர்வு செய்கிறதா என்பதுதான் அடுத்தகட்ட அரசியல் சோதனை. இந்த மோதலில் யாருடைய வாதம் மக்களை சென்றடைகிறது என்பதே இறுதியில் முக்கியம்.

Leave a Comment