இந்தியா நட்பு நாடுன்னு சொல்லிகிட்டு இந்திய கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதா? ஈரானுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா.. “நாங்க அமைதியை விரும்புறவங்கதான், ஆனா எங்க அமைதியை எங்க பலவீனம்னு நினைச்சா… அதுக்கு நாங்க கொடுக்கப்போற பதில் ரொம்ப ‘அதிரடியா’ இருக்கும்!

இந்திய பெருங்கடல் மற்றும் ஓமன் வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது இந்தியாவிற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டிலிருந்து சுமார் இரண்டு மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை சுமந்து வந்த ஒரு பெரிய இந்திய கப்பல் மீது, ஓமன் நாட்டின் வடக்கு பகுதியில் வைத்து ஈரான் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு முன்னதாக ‘ஜாக் அர்னவ்’ மற்றும் ‘சான்மார் ஹெரால்டு’ ஆகிய இரண்டு இந்திய கப்பல்கள் ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக செல்ல முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஜாக் அர்னவ் கப்பல் நேரடியாக தாக்குதலுக்கு உள்ளான நிலையில், அருகில் இருந்த சான்மார் ஹெரால்டு கப்பலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது ஓரளவிற்கு ஆறுதலான செய்தியாகும்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இந்திய கடற்படை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. தற்போது ஹார்முஸ் நீர்ச்சந்தி பகுதியில் இந்திய போர்க்கப்பல்கள் எதுவும் இல்லை என்றாலும், ஓமன் வளைகுடாவில் இரண்டு அழிப்பு கப்பல்கள் ஒரு போர்க்கப்பல் மற்றும் ஒரு டேங்கர் கப்பல் ஆகியவற்றை இந்தியா நிலைநிறுத்தியுள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை நடத்திய இந்த தாக்குதலை இந்திய அரசு மிகவும் தீவிரமாக கருதுகிறது. சர்வதேச கடல் பகுதிகளில் சுதந்திரமான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை இந்தியா எப்போதும் ஆதரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான கப்பலின் அருகே மற்றொரு இந்திய கச்சா எண்ணெய் கப்பலும் இருந்தது, ஆனால் அது தாக்குதலில் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வளைகுடா நாடுகளிலிருந்து எரிசக்தி இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள இந்தியா, இந்த பாதையை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்காவுடனான போருக்கு மத்தியில், ஈரான் சில நாடுகளை தனது நட்பு நாடுகளாக பட்டியலிட்டு, அவர்களின் கப்பல்களை மட்டும் அனுமதிக்க முன்வந்தது. அந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம்பெற்றிருந்தது. இருப்பினும், தற்போது இந்திய கப்பல் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் ஒரு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஈரான் தூதருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் முறைப்படி சம்மன் அனுப்பி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. வியக்கத்தக்க வகையில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே அமெரிக்கா முன்னெடுத்த 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து, ஹார்முஸ் நீர்ச்சந்தி தற்காலிகமாக திறக்கப்படுவதாக ஈரான் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து எட்டு கப்பல்கள் அடங்கிய ஒரு குழு அந்த நீர்ச்சந்தியை கடந்த முதல் பெரிய மாற்றமும் நிகழ்ந்தது. ஆனால், அந்த அமைதி அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்தியக் கடற்படை இப்போது தனது கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Leave a Comment