பாலங்கள் உடையலாம், மின்சாரம் போகலாம்… ஆனா ஈரான் ஒருபோதும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காது! மிரட்டலுக்கு பணிஞ்சு ஒப்பந்தம் போட நாங்க ஒன்னும் பலவீனமான நாடு இல்ல… பதிலடி கொடுக்க துடிக்கிற சிங்கத்தோட குகை.. டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்த ஈரான்..!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் தற்போது உச்சகட்ட பதற்றத்தை எட்டியுள்ளது. ஏப்ரல் 8-ம் தேதி தொடங்கி 14 நாட்கள் நீடித்த அமெரிக்கா-ஈரான் தற்காலிக போர்நிறுத்தம் வரும் ஏப்ரல் 22 நிறைவடைகிறது. இந்த சூழலில், இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை புறக்கணிப்பதாகத் தெஹ்ரான் அதிரடியாக அறிவித்துள்ளது. அமெரிக்காவின் தர்க்கமற்ற நிபந்தனைகளும், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளுமே இந்த முட்டுக்கட்டைக்கு காரணம் என ஈரான் தரப்பு சாடியுள்ளது.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது எச்சரிக்கையை மிக கடுமையான வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார். “அமைதி ஒப்பந்தத்தை தவறவிட்டால் ஈரானின் முக்கிய பகுதிகள், பாலங்கள் சிதைக்கப்படும்” என்று எச்சரித்துள்ள அவர், தான் இனிமேல் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கப் போவதில்லை என்றும் தெள்ளத்தெளிவாகக் கூறியுள்ளார். மிரட்டல்கள் ஒருபுறம் இருந்தாலும், பேச்சுவார்த்தைக்கான கதவுகள் இன்னும் திறந்திருப்பதாக அமெரிக்கா தரப்பில் சொல்லப்படுகிறது.

ஈரானின் அதிகார மையத்தில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன. மிதவாத தலைவர்கள் அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, ‘இஸ்லாமிய புரட்சிகர காவல்படை’ நாட்டின் ராணுவம் மற்றும் ராஜதந்திர முடிவுகளை தனது முழு ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்துள்ளது. இந்த தீவிரப் போக்குடைய அதிகார மாற்றமே அமெரிக்காவுடனான சமரச பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரிக்க முதன்மைக் காரணமாக அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவின் கடல்சார் முற்றுகை மற்றும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல் என பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் ரெசா அமிரி மொகடம் கண்டனம் தெரிவித்துள்ளார். முற்றுகையை தளர்த்தாமல் ராஜதந்திரம் பேசுவது போலியான செயலாகும் என்று அவர் விமர்சித்துள்ளார்.

போர் தீவிரமடைந்தால் ஏற்படக்கூடிய பொருளாதார சரிவைத் தவிர்க்க வளைகுடா நாடுகள் இப்போதே தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் தனது நிதி ஆதாரங்களை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவிடம் அவசர கால ஒப்பந்தங்கள் குறித்து பேசி வருகிறது. இதனிடையே, கரீபியன் கடற்பகுதியில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் பலியானது சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளது. மொத்தத்தில், ஏப்ரல் 22-ம் தேதிக்கு பிறகு மத்திய கிழக்கில் ஒரு மாபெரும் போர் மூளும் அபாயம் கண்கூடாக தெரிகிறது.

Leave a Comment