தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது. குறிப்பாக, நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ள சூழலில், அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளன. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் முதல் சில அரசியல் விமர்சகர்கள் வரை, விஜய்யின் அரசியல் வருகையை திட்டமிட்டே சிறுமைப்படுத்தும் நோக்கில் செயல்படுவதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவர்கள் முன்வைக்கும் விமர்சனங்கள் சாதாரண அரசியல் விவாதங்களை தாண்டி, தனிப்பட்ட வன்மத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாகத் தவெக ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, 200 ரூபாய் பெற்றுக்கொண்டு சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்யும் கும்பலை விட மோசமாக சில அரசியல் விமர்சகர்கள் நடந்துகொள்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. விஜய்யின் அரசியல் பேச்சுகளை “வெறும் சினிமாத்தனம்” என்று விமர்சிப்பதும், அவர் ஊடகங்களை சந்திக்க அஞ்சுகிறார் என்று குற்றம் சாட்டுவதும் இவர்களது வழக்கமான உத்தியாக மாறியுள்ளது. ஆனால், இந்த கூட்டத்தின் பொய் பிரச்சாரங்கள் வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் முற்றிலுமாக தகர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பதை அன்று தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டும் என்பதால், தற்போதைய அவதூறு பரப்புரைகள் தற்காலிகமானவை என்றே பார்க்கப்படுகின்றன.
மக்களைக் குழப்பி, அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப முடிந்தவரை அனைத்து வேலைகளையும் இந்த விமர்சகர்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக, விஜய்யின் ஆதரவாளர்கள் அனைவரும் “வாக்குரிமை இல்லாத சிறுவர்கள்” என்றும், அவரது கூட்டங்களில் திரளும் கூட்டம் வாக்குகளாக மாறாது என்றும் கேலி செய்யப்படுகிறது. இது போன்ற கருத்துக்கள் மக்களின் மனநிலையை மாற்ற உதவும் என்று அவர்கள் நம்புகின்றனர். இருப்பினும், மக்களின் அடிப்படைத் தேவைகளான வேலைவாய்ப்பு மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் குறித்துப் பேசும் விஜய்யின் நிலைப்பாட்டை இளைஞர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
அரசியல் விமர்சகர்கள் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள தவறிவிட்டனர்; இது 1990-களின் காலம் அல்ல, இது 2026-ன் டிஜிட்டல் உலகம். இன்று ஒவ்வொரு குடிமகனின் கையிலும் ஸ்மார்ட்போன் உள்ளது, தகவல்கள் நொடிப்பொழுதில் மக்களை சென்றடைகின்றன. யார் உண்மையான நோக்கத்திற்காக பேசுகிறார்கள், யார் பிறருக்காக கூலிக்கு மாரடிக்கிறார்கள் என்பதை இன்றைய தலைமுறை எளிதாக கண்டறிந்துவிடுகிறது. டிஜிட்டல் தளங்களில் தரவுகளை ஒப்பிட்டு பார்க்கும் வசதி இருப்பதால், முகத்தைப் பார்த்தே இவர்கள் “பிராடு” என்பதையும், இவர்களது விமர்சனங்கள் யாருடைய தூண்டுதலின் பேரில் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் மக்கள் தௌிவாக அறிந்து வைத்துள்ளனர்.