நாங்க கணக்கு போட்டு அரசியலுக்கு வரல… ஆனா நாங்க அரசியலுக்கு வந்தாலே கணக்கு தானா மாறும்! நாங்க 2026-க்காக மட்டும் வரல… அடுத்த நூறு வருஷத்துக்கான மாற்றத்துக்காக வந்திருக்கோம்! தவெகவினர் பதிவுகள் வைரல்..!

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களம் மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய சித்தாந்த மற்றும் புள்ளிவிவர புரட்சியாக உருவெடுத்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, தமிழகத்தின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை சுமார் 6.2 கோடியாக உள்ள நிலையில், அதில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தமிழக வெற்றி கழகம் தனது கட்சி உறுப்பினர்களாக ஒரு கோடிக்கும் அதிகமானோரை பதிவு செய்துள்ளதாக கூறுவது, ஒட்டுமொத்த தேர்தல் கணக்கீடுகளையும் தலைகீழாக மாற்றியுள்ளது. இது மொத்த வாக்காளர்களில் சுமார் 22 சதவீதமாகும். ஒரு கட்சி தேர்தலுக்கு முன்பே இவ்வளவு பெரிய உறுதிமிக்க வாக்காளர் தளத்தை கொண்டிருப்பது, மற்ற அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

புள்ளிவிவர ரீதியாகப் பார்த்தால், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் 35 வயதுக்குட்பட்ட இளம் பெண்கள் மாற்றத்தை நோக்கியே நகர்கின்றனர். கடந்த தேர்தல்களில் 35 முதல் 37 சதவீத வாக்குகளை பெற்றாலே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது விஜய் தலைமையிலான தவெக, அடிப்படை வாக்குகளாகவே 22 சதவீதத்தை கொண்டுள்ள நிலையில், ஆளும் கட்சி மீதான அதிருப்தி வாக்குகள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் 8 முதல் 10 சதவீத ஆதரவு கிடைத்தால் கூட, அது 30 சதவீதத்தை தாண்டிவிடும். தேர்தல் பிரச்சாரங்கள் முறையாக திட்டமிடப்பட்டு, மக்களின் அடிப்படைத் தேவைகளான ஊழலற்ற நிர்வாகம், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிப்படையான டெண்டர் முறைகள் போன்ற வாக்குறுதிகள் மக்களை சென்றடைந்தால், தவெக 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வாய்ப்புள்ளது. இது நிகழ்ந்தால், 120 முதல் 140 தொகுதிகள் வரை வெற்றி பெற்று தனிப்பெரும் சக்தியாக உருவெடுப்பது உறுதி.

சமூக வலைதளங்களின் எழுச்சி மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு ஆகியவை பாரம்பரிய ஊடகங்களின் ஆதிக்கத்தை குறைத்துள்ளன. இன்று ஒரு சாதாரண கிராமத்து பெண்மணி கூட, சமூக வலைதளங்களில் பகிரப்படும் நகைச்சுவை மற்றும் ஆக்கபூர்வமான விவாதங்கள் மூலம் அரசியலை உன்னிப்பாக கவனிக்கிறார்.
பிரியாணிக்கும், பணத்திற்கும் மயங்கும் காலம் மெல்ல மெல்ல மறைந்து, தங்களது குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாக்களிக்கும் மனநிலை மக்களிடம் உருவாகியுள்ளது. 2026 தேர்தலில் பெண்களின் வாக்குகள் யாருக்கு விழுகிறதோ, அவர்களே கோட்டையை பிடிப்பார்கள். விஜய்யின் மக்கள் சந்திப்புகளில் திரளும் கட்டுக்கடங்காத பெண்களின் கூட்டம், குறிப்பாக இளம் தாய்மார்களின் ஆதரவு, திராவிடக் கட்சிகளின் கோட்டையைத் தகர்க்கும் ஒரு பலமான ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் தமிழக வரலாற்றில் ஒரு புதிய விடியலை நோக்கி இட்டுச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

Leave a Comment