பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டால் தொழில்கள் முடங்கும்ன்னு பயமுறுத்தினாங்க.. ஆனால் முதல்வர் விஜய் பயப்படலை.. வர்றது வரட்டும் , விமான நிலையத்தை விட விவசாயிகள் நிலம் தான் முக்கியம்ன்னு முடிவெடுத்தார்.

பரந்தூர் விமான நிலையம் ரத்து செய்யப்பட்டால் தொழில்கள் முடங்கும்ன்னு பயமுறுத்தினாங்க.. ஆனால் முதல்வர் விஜய் பயப்படலை.. வர்றது வரட்டும் , விமான நிலையத்தை விட விவசாயிகள் நிலம் தான் முக்கியம்ன்னு முடிவெடுத்தார்.. விமான நிலையம் எங்கே வேணும்ன்னாலும் கட்டிடலாம், ஆனால் விவசாய நிலத்தில் மட்டும் விவசாயம் செய்ய முடியும்.. பரந்தூர் மக்கள் கண்ணீருடன் நன்றி..

பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பரந்தூர் – ஏகனாபுரம் பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக போராடி வந்த நிலையில், தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைத்திருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் எடுத்த முடிவு தங்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளதாக போராட்டக் குழுவைச் சேர்ந்த கதிரேசன் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் விவகாரத்தை முதலமைச்சர் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன், அதன் பிறகு என இரண்டு கட்டங்களாகவே பார்க்க வேண்டும் என்று கதிரேசன் கூறியுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் அப்போதைய திமுக அரசு தங்களது போராட்டத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் குற்றம்சாட்டினார். ஆனால், விஜய் பரந்தூர் பகுதிக்கு வந்து மக்களை சந்தித்த பிறகுதான் இந்த பிரச்சினை தமிழகத்தைத் தாண்டி இந்திய அளவில் பேசப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அப்போது “எங்களுடன் உறுதியாக நிற்பேன்” என்று விஜய் அளித்த வாக்குறுதி தங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு எதிராக தாங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததாகவும், அந்த வழக்குக்காக தங்களது தரப்பில் இருந்து ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்றும் கதிரேசன் தெரிவித்துள்ளார். வழக்கு தொடர்பான முழு செலவையும் விஜய் தரப்பே ஏற்றுக்கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதனால், அரசியல் ஆதரவு மட்டுமல்லாமல் சட்டரீதியாகவும் தங்களுக்கு துணை நின்றதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

விஜய் ஆட்சிக்கு வந்ததும் பரந்தூர் விவகாரத்தில் பின்வாங்கிவிடுவார் என்றும், அதிகார அழுத்தங்களை அவரால் சமாளிக்க முடியாது என்றும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதாக கதிரேசன் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த விமர்சனங்களை நம்பாமல் விஜய் மீது தாங்கள் முழு நம்பிக்கை வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதனால்தான் கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருப்பது தங்களது நீண்டகால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுவதாக போராட்டக் குழுவினர் தெரிவிக்கின்றனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் பல ஆண்டுகளாக போராடி வந்த நிலையில், தற்போது அந்த அச்சம் நீங்கியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். “முதல்வருக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது” என்ற அளவுக்கு இந்த முடிவு தங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கதிரேசன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, “100 நாட்களில் இந்த அரசு என்ன செய்தது?” என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். பல ஆண்டுகளாக நீடித்த ஒரு முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதும், பொதுமக்களின் எதிர்ப்பை கருத்தில் கொண்டு திட்டத்தை கைவிடுவதும் மிகப்பெரிய சாதனைதான் என அவர் கூறியுள்ளார். அரசின் ஒவ்வொரு முடிவையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்ப்பதைவிட, பரந்தூர் மற்றும் ஏகனாபுரம் மக்களின் வாழ்வாதாரத்துக்கு கிடைத்துள்ள நிம்மதியை பார்க்க வேண்டும் என்பதே போராட்டக் குழுவினரின் கருத்தாக உள்ளது.

Leave a Comment