60 வருஷமா என்ன தான் ஆட்சி செஞ்சீங்க… மின்சாரத்தையே பார்க்காத ஒரு கிராமம், அதுவும் மதுரை பக்கத்துல இருந்ததை இத்தனை வருடம் அரசியல்வாதிகள் ஏன் கண்டுகொள்ளவில்லை.. தவெக அரசு வந்து தான் இப்ப மின்கம்பம் நட்டிருக்கு.. உலகம் டிஜிட்டல் ரேஞ்சுக்கு போய்கிட்டு இருக்கு.. இங்க என்னடான்னா இப்ப தான் கரண்ட் கொடுத்திருக்கோம்.. தமிழ்நாட்டை எவ்வளவு வருசம் பின்னோக்கி வச்சிருக்காங்க ரெண்டு திராவிட கட்சிகளும்…

தொழில்நுட்பமும் டிஜிட்டல் மினுமினுப்புகளும் உலகையே ஆட்டிப்படைக்கும் இந்த 2026 ஆம் ஆண்டிலும், மின்சாரமே இல்லாத ஒரு கிராமத்தை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா என்றால், ஆம் அதுதான் எதார்த்தம் என்று வேதனையோடு சுட்டிக்காட்டுகிறது இந்தச் செய்தி. மதுரை கிழக்கு பகுதிக்கு உட்பட்ட தீர்த்தக்காடு கிராமத்தில் வசித்து வரும் தலித் குடும்பங்கள், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக போதிய மின்சார வசதி இன்றி இருளிலேயே தங்களின் வாழ்க்கையை கழித்து வந்துள்ளனர். நில பட்டா தொடர்பான குளறுபடிகள், நிர்வாக தாமதங்கள் மற்றும் அதிகாரத்துவ சிக்கல்கள் காரணமாக தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடி வந்த இந்த மக்களின் நீண்ட காலப் போராட்டத்திற்குத் தற்போது ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளது.

தீர்த்தக்காடு கிராமத்தில் முதற்கட்டமாக மின் கம்பங்களை நடும் பணிகளை டாங்கெட்கோ (TANGEDCO) அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த முதற்கட்ட மின்மயமாக்கல் திட்டத்தின் மூலம் அங்குள்ள ஐந்து குடும்பங்களுக்கு உடனடியாக மின்சார இணைப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி 13, 2026 அன்று ஊடகங்களில் வெளியான புலனாய்வுக் கட்டுரை ஒன்றின் மூலம் இந்த மக்களின் அவலநிலை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போதைய தமிழக அரசு இதனை உணர்ந்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது பாராட்டத்தக்கது.

இந்த கிராமத்தில் மொத்தம் 360 தலித் குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இவர்களுக்கு மின்சாரம் மட்டுமன்றி முறையான குடிநீர் வசதி, சாலைகள், வடிகால் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற எந்தவொரு அடிப்படைத் தேவைகளும் தசாப்தங்களாக எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளன. மதுரை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு இடையே நிலவி வந்த நீண்ட காலப் பட்டா விவாதங்களே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் தொடர் புறக்கணிப்புகளால் கடும் விரக்தியடைந்த கிராம மக்கள், அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகக் கூட அறிவித்துத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1982 ஆம் ஆண்டிலேயே தகுதியுடைய 349 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் வாக்குறுதிகள் வெறும் காகித அளவிலேயே நின்றுவிட்டன. கடந்த ஆண்டு அப்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து வெறும் 68 குடும்பங்கள் மட்டுமே இ-பட்டாக்களை பெற்றிருந்தன, இதுவே உள்கட்டமைப்பு பணிகளுக்கு ஓரளவிற்கு வழிவகுத்தது. தற்போது முதற்கட்டமாக மின்சாரம் தங்களின் வீடுகளுக்கு வருவதை வரவேற்கும் அதே வேளையில், எஞ்சியிருக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கும் பட்டாக்கள் முழுமையாகக் கிடைக்கும் வரை தங்களால் இதனை முழுமையாகக் கொண்டாட முடியாது என்று உள்ளூர் மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இந்த விவகாரத்தில் தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம் தலையிட்டு, ஜூலை 2 ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவுக்கு ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், தலித் மக்களின் நில உரிமைகள் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்யத் தகுந்த நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சமூக நீதித் துறை அமைச்சர் வன்னி அரசு மற்றும் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ். கார்த்திகேயன் ஆகியோர் நேரடியாகத் தலையிட்டு பணிகளை முடுக்கிவிட்டுள்ளதால், இக்கிராம மக்கள் தங்களின் நீண்ட காலப் போராட்டத்தின் முதல் வெற்றியைப் பெற்றுள்ளனர்.

இருப்பினும், மின்சார இணைப்பு என்பது இந்த மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கான ஒரு ஆரம்பப்புள்ளி மட்டுமே ஆகும். நிலப் பட்டாக்கள் முழுமையாக வழங்கப்படுவதுடன், பாதுகாப்பான குடிநீர், முறையான சாலைகள், சாக்கடை வடிகால் அமைப்புகள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகள் போன்ற எஞ்சிய சவால்களும் போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Comment