அதெப்படி எல்லா ஒப்பந்ததாரர்களும் ஒரே தொகைக்கு டெண்டர் போடுறாங்க.. கூட்டணி அமைச்சு, குழு அமைச்சு, சிண்டிகேட் அமைச்சு போடுவதெல்லாம் இனி நடக்காது.. இது விஜய்யின் தவெக ஆட்சி.. கடந்த ஆட்சியின் செய்த புத்திசாலித்தனமான முறைகேடு எல்லாம் களைய நடவடிக்கை ஆரம்பிச்சாச்சு.. உள்ளாட்சி தேர்தலில் 2 திராவிட கட்சிகளும் துடைத்து எறியப்பட்டால் எல்லாமே சரியாகிவிடும்..
சென்னை பெருநகர மாநகராட்சியில் டெண்டர்களை ஒதுக்கீடு செய்வதில் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பாகச் செயல்பட்டு முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்வதாக அதிர்ச்சிளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசுத் துறைகள் அனைத்தும் போட்டி ஏல முறைக்கு மாற்றப்பட்ட போதிலும், ஒப்பந்ததாரர்கள் முறைகேடான வழிகளில் டெண்டர்களைத் தங்களுக்குள் முன்கூட்டியே தீர்மானிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாநகராட்சி வெளியிட்ட பல டெண்டர்களை ஆய்வு செய்ததில், ஒப்பந்ததாரர்கள் ஒரே மாதிரியான தொகையைக் குறிப்பிட்டுப் புள்ளிவிவர மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
உதாரணமாக, மெட்ரோ வாட்டர் சாலைப் பணிக்கான டெண்டரில் ஐந்து ஒப்பந்ததாரர்கள் சரியாக ₹1,00,227 என்ற ஒரே தொகையைக் குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் L1 நிலையை அடைந்து, பணி பகிர்ந்து அளிக்கப்படும் சூழல் உருவானது. இதேபோன்று பெருங்குடி பகுதியில் நடைபெற்ற மற்றொரு சாலைப் பணிக்கான டெண்டரிலும் நான்கு ஒப்பந்ததாரர்கள் துல்லியமாக ₹1,67,045 என்ற ஒரே தொகையைக் குறிப்பிட்டுள்ள நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மற்றொரு டெண்டரில் நான்கு ஒப்பந்ததாரர்கள் 4.99% நெகட்டிவ் பிட் தொகையைக் குறிப்பிட, மற்றொரு ஒப்பந்ததாரர் 14.99% நெகட்டிவ் பிட் குறிப்பிட்டு L1 ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ₹1,79,356 மதிப்பில் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளார். அதேபோல, வளசரவாக்கத்தில் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்கான இரு வேறு டெண்டர்களிலும் ஒரே ஒப்பந்ததாரர் குழு பங்கேற்று ஒரே மாதிரியான சதவீதங்களைக் குறிப்பிட்டு ஒப்பந்தத்தைக் கைப்பற்றியுள்ளது தெளிவாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ‘அறப்போர் இயக்கம்’ தொண்டு நிறுவனத்தின் அமைப்பாளர் எம். ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகையில், ஒரே ஒப்பந்ததாரர்கள் பல்வேறு திட்டங்களில் பங்கேற்று ஒரே தொகையைக் குறிப்பிடுவதும் பணிகளைப் பகிர்ந்து கொள்வதும் அப்பட்டமான கார்ட்டெல் முறைகேடு என்று குற்றம் சாட்டியுள்ளார். போட்டி ஏல முறையின் முக்கிய நோக்கமே குறைந்த விலையில் தரமான சேவையைப் பெறுவதுதான்; ஆனால், ஒப்பந்ததாரர்கள் கூட்டாகச் செயல்பட்டு விலையை நிர்ணயிப்பது இந்த அமைப்பையே சீர்குலைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில், கூடுதல் வைப்புத் தொகையைத் தவிர்ப்பதற்காகவே ஒப்பந்ததாரர்கள் 4.9% மற்றும் 14.99% போன்ற குறிப்பிட்ட நெகட்டிவ் விகிதங்களைக் குறிப்பிடுகிறார்கள் என்று மூத்த அதிகாரி ஒருவர் விளக்கமளித்துள்ளார். 5% வரை நெகட்டிவ் பிட்களுக்கு கூடுதல் வைப்புத் தொகை தேவையில்லை என்றும், 5% முதல் 15% வரை 2% வைப்புத் தொகையும், 15%-க்கு மேல் 50% வைப்புத் தொகையும் செலுத்த வேண்டும் என்பதால் இந்த உத்தியைப் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அரசு முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் இரகசியக் கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டி ஏல முறையை நீர்த்துப்போகச் செய்வது பொதுமக்களின் வரிப்பண விரையத்திற்கு வழிவகுக்கும். சென்னை மாநகராட்சியில் வெளிப்படையான போட்டிச் சூழலை உறுதி செய்யவும், இத்தகைய ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பைக் கட்டுப்படுத்தவும் நிர்வாக ரீதியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் முதன்மை கோரிக்கையாக உள்ளது.