தமிழ்நாடு கடந்த சில ஆண்டுகளாக சந்தித்த அரசியல் போக்குகளையும், ஆளுங்கட்சியின் செயல்பாடுகளையும் உற்றுநோக்கும்போது, மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதை விட, உணர்ச்சிப்பூர்வமான மற்றும் அடையாள அரசியல் சார்ந்த விவகாரங்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ என்ற பலத்த சந்தேகம் எழுகிறது. திருவள்ளுவருக்கு காவி உடை உடுத்துவது, ஆளுநருக்கு எதிரான தொடர் போராட்டங்களை முன்னெடுப்பது, தமிழகத்திற்கு வரும் நாட்டின் பிரதமருக்கு கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதையை கூடக் கொடுக்க மறுத்து ‘கோ பேக் மோடி’ என முழக்கமிடுவது போன்ற நிகழ்வுகளிலேயே இவர்களின் முழு ஆற்றலும் செலவிடப்பட்டது. இத்தகைய செயல்பாடுகள் அரசியல் அரங்கில் தற்காலிக பரபரப்பை ஏற்படுத்தியதே தவிர, சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் எந்தவொரு நேர்மறையான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
இதேபோன்று, சித்திரை மாதம் தான் தமிழ்ப்புத்தாண்டா அல்லது தை மாதம் தான் தமிழ்ப்புத்தாண்டா என்ற தேவையற்ற வரலாற்று விவாதங்களை மீண்டும் மீண்டும் கிளப்புவது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு தான் முதலிடம் தரப்பட வேண்டும் என்று மேடைகளில் முழங்குவது என முற்றிலும் உணர்ச்சிகளை மட்டுமே மூலதனமாக கொண்ட விவகாரங்கள் முன்னிறுத்தப்பட்டன. சராசரி மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு ஐந்து பைசாவுக்கு கூட பிரயோசனம் இல்லாத இத்தகைய முழக்கங்களை கூவிக்கூவியே கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சி நிர்வாகம் வீணடிக்கப்பட்டுவிட்டது என்ற தார்மீக குற்றச்சாட்டு தற்பொழுது மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. அடையாள அரசியலை மட்டுமே முதன்மையாக கொண்டு காலத்தை கடத்தியதால், உண்மையான நிர்வாக சீர்திருத்தங்கள் அனைத்தும் தேக்கமடைந்தன.
இந்த ஐந்து ஆண்டுகாலப் பயணத்தில், பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளான தரமான சாலைகள், தடையில்லா குடிநீர் வசதி, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துதல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல் போன்ற விவகாரங்களில் ஒரே ஒரு உருப்படியான மற்றும் தொலைநோக்குடைய நடவடிக்கையையாவது இந்த அரசு மக்களுக்காக எடுத்ததுண்டா என்ற கேள்வி எழுகிறது. விளம்பரங்களுக்கும், வெற்று அறிக்கைகளுக்கும் செலவிட்ட நேரத்தில் பாதியைக் கூட, மக்கள் நலத் திட்டங்களை அடிமட்ட அளவில் கொண்டு சேர்ப்பதில் காட்டவில்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை.
மக்களாட்சியில் வாக்களித்த பொதுமக்களும் தங்களுக்கு ஏற்படும் அன்றாடத் துயரங்களை பொறுத்துப் பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் தங்களது பொறுமையை இழக்க தொடங்கிவிடுகிறார்கள். தங்களின் வாக்குகளைப் பெற்று அரியணையில் அமர்ந்தவர்கள், தங்களின் வறுமையையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் போக்குவார்கள் என்று நம்பிய ஏழை எளிய மக்கள், தொடர்ந்து ஏமாற்றப்படும்போது மாற்று சக்திகளை நோக்கி நகர தொடங்குவது காலத்தின் கட்டாயமாகிவிடுகிறது. மக்களின் இந்த நீண்ட நாள் பொறுமைதான் தற்போதைய தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அதிரடி மாற்றங்களுக்கு முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.
தமிழ், தமிழினம், தமிழ் மொழி பற்று என்ற உன்னதமான உணர்வுகளை தங்களது சுயநல அரசியல் லாபத்திற்காகவும், அதிகாரத்தை தக்கவைத்து கொள்வதற்காகவும் மட்டுமே ஒரு சில திராவிட கூட்டமைப்புகள் இத்தனை காலமாக பயன்படுத்தி வந்தன. தமிழை வைத்து தொடர்ந்து வியாபாரம் செய்தது போதும் என்றும், மொழியை காப்பதாக கூறிக்கொண்டு மக்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் இத்தகைய போலித்தனமான அணுகுமுறைகளை இனிமேலும் தமிழக மக்கள் சகித்துக் கொள்ள தயாராக இல்லை என்பதும் தற்பொழுது அப்பட்டமாகத் தெரிகிறது.
இனிவரும் காலங்களிலாவது, வெற்று தமிழ் முழக்கங்களையும், ஆளுநர் மற்றும் மத்திய அரசுடனான வீண் மோதல் போக்குகளையும் கைவிட்டு, இந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் தேவையான உருப்படியான திட்டங்களை பற்றித் தலைவர்கள் யோசிக்க வேண்டும். வெற்று உணர்சி பேச்சுக்கள் ஒருபோதும் பசியை போக்காது என்பதை உணர்ந்து, தார்மீக பொறுப்புடன் நிர்வாகத்தில் கவனம் செலுத்தினால் மட்டுமே எஞ்சியிருக்கும் அரசியல் எதிர்காலத்தையாவது அவர்கள் தக்க வைத்து கொள்ள முடியும்.