விஜய், ஸ்டாலின், ஈபிஎஸ்.. 3 பேருக்குமே இந்த இடைத்தேர்தல் இமேஜ் சம்பந்தப்பட்டது.. தவெக தோற்றால் விஜய் இமேஜ் காலியாகிவிடும்.. திமுக தோற்றால் கட்சி எதிர்காலம் கேள்விக்குறி.. அதிமுக தோற்றால் ஈபிஎஸ் பதவிக்கே ஆப்பு.. இது இடைத்தேர்தல் வெற்றி அல்ல.. 3 முக்கிய தலைவர்களின் வெற்றி தோல்வி.. யார் தப்பிக்க போகிறார்.. யார் யார் குழியில் விழ போகிறார்கள்.. 9ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்..
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாள் நெருங்க நெருங்க, தமிழக அரசியல் களத்தில் போட்டியிடும் முக்கியக் கட்சிகளுக்கு ‘பல்ஸ்’ எகிற ஆரம்பித்துள்ளது. வழக்கமாக இடைத்தேர்தல்கள் ஆளும் தரப்பிற்குச் சாதகமாக அமையும் என்ற பிம்பம் இருந்தாலும், இந்த முறை களம் முற்றிலும் மாறுபட்ட அரசியல் சூழலைச் சந்திக்கிறது. குறிப்பாக, இந்த இரண்டு தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் வரவிருக்கும் தமிழக அரசியல் போக்கையே தீர்மானிக்கும் என்ற நிலை உருவானதால், தவெக, திமுக, அதிமுக ஆகிய மூன்று முக்கியக் முகாம்களிலுமே சொல்ல முடியாத பதற்றமும் நெருக்கடியும் தொற்றிக் கொண்டுள்ளது.
ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை, இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது வெறும் தொகுதி வெற்றியோடு முடிந்துவிடக் கூடிய ஒன்று அல்ல; அது முதலமைச்சர் விஜய்யின் அரசியல் இமேஜ் சார்ந்த மிக முக்கியப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. “இரண்டில் ஒன்று தவறினாலும் கூட, இதுவரை மக்கள் மத்தியில் மிகுந்த கஷ்டப்பட்டு கட்டிக்காத்த முதலமைச்சர் விஜய்யின் செல்வாக்கும் இமேஜும் காலியாகிவிடும்” என்ற பெரும் அரசியல் நெருக்கடி தவெக தலைமையை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாகவே, ஒட்டுமொத்த அமைச்சரவையையும், முக்கியக் தலைவர்களையும் முழுமையாகக் களத்தில் இறக்கி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட வைத்துள்ளது கட்சித் தலைமை.
தவெகவின் அமைச்சர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு இந்தத் தொகுதிகள் முற்றிலும் புதிய ஊராகவும், அங்குள்ள மனிதர்கள் மற்றும் உள்ளூர் அரசியல் களங்கள் புதிய அனுபவமாகவும் இருக்கின்றன. இருந்தாலும், அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் படை பரிவாரங்களுடன் ஆளுக்கொரு திசையாகத் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள். தங்களின் பொறுப்பிலுள்ள வார்டுகளிலும் கிராமங்களிலும் தங்கி, அடிமட்டத் தொண்டர்கள் போல முகாமிட்டுத் தேர்தல் வேலைகளைச் செய்து வருகிறார்கள். ஆட்சியில் இருந்தாலும் களத்தில் சற்றேனும் தொய்வு ஏற்பட்டால் அது பெரிய பின்னடைவாகிவிடும் என்பதால், அமைச்சர்கள் அத்தனை பேரும் இரவென்றும் பகலென்றும் பாராமல் ஓடியாடி உழைத்து வருகிறார்கள்.
மறுபுறம், முதன்மை எதிர்க்கட்சியான திமுக முகாமிலும் நெருக்கடியும் பதற்றமும் சற்றும் குறையாமல் நிலவி வருகிறது. “இந்த இரண்டு இடைத்தேர்தல்களில் ஒன்றில் கூட நம்மால் வெற்றிபெற முடியவில்லை என்றால், தேர்தல் களத்தில் கட்சியின் எதிர்காலமே பெரிய கேள்விக்குறியாகிவிடுமே…” என்ற ஆழ்ந்த பதற்றத்தில் இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆட்சியை இழந்த பிறகும் தங்களின் செல்வாக்கு குறையவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் திமுக உள்ளதால், அவரும் அவரது முக்கிய நிர்வாகிகளும் தொகுதியின் அனைத்துப் பகுதிகளிலும் முகாமிட்டுப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
அதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நிலையோ இன்னும் தீவிரமான அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ளது. “தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுமே நாம் ஏற்கெனவே வென்ற பாரம்பரியத் தொகுதிகள். அப்படியிருக்கும்போது, அதில் ஒன்றைக்கூட நம்மால் மீட்டெடுக்க முடியவில்லை என்றால், நமது தலைமைக்கே ஆபத்தாகிவிடுமே…” என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாகப் பதறிப்போயிருக்கிறார். இதனால், தேர்தல் களம் குறித்து நாளுக்கொரு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, நிர்வாகிகளுக்குத் தொடர் உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
இருப்பினும், களத்தில் சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் மந்தமான செயல்பாடுகளும், உள்கட்சிச் சொதப்பல்களும் எடப்பாடி பழனிசாமியை ரொம்பவே உஷ்ணமாக்கியிருக்கின்றன. நிர்வாகிகளைக் கூப்பிட்டு டோக்கன் போடுவதும், உடனுக்குடன் கள நிலவரங்களை மாற்றக் கடுமையான எச்சரிக்கைகள் விடுப்பதுமாக அதிமுக தலைமை கொதிப்பில் இருக்கிறது. மொத்தத்தில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் களம், மூன்று பிரதான தலைவர்களுக்கும் தங்களின் அரசியல் வலிமையையும் செல்வாக்கையும் நிரூபிக்கும் வாழ்வா சாவா போராட்டமாக மாறியுள்ளது. இருப்பினும் கடைசி கட்ட கணிப்பின்படி முதல்வர் விஜய்யின் விசிட்டுக்கு பின்னர் இரு தொகுதிகளும் தவெக பக்கம் சாய்ந்திருப்பதை காண முடிகிறது.