tech news
முடங்கிய எக்ஸ்.. அடித்து ஆடிய புளூஸ்கை ஆப்.. இது என்னப்பா புதுசா இருக்கு..?
 
																								
												
												
											எலான் மஸ்க்-இன் எக்ஸ் சமூக வலைதளத்திற்கு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிரேசில் நாட்டில் தடை விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி அதிகாலை முதலே பிரேசில் நாட்டில் பயனர்களால் எக்ஸ் தளத்தை இயக்க முடியாத நிலை உருவானது. இதனை பயனர்கள் மற்ற சமூக வலைதளங்களில் தெரிவித்தனர்.
பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் முடங்கிய நிலையில், புளூஸ்கை எனும் சமூக வலைதளத்தை அந்நாட்டு பயனர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
இதன் காரணமாக கடந்த மூன்றே நாட்களில் புளூஸ்கை செயலியை சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளனர். இதுதவிர பிரேசில் நாட்டில் ஐபோன் ஆப் சார்டில் முன்னணி இலவச செயலிகள் பட்டியலில் புளூஸ்கை முதலிடம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
எக்ஸ் தளம் முடங்கியதால் பிரபலமாகி இருக்கும் புளூஸ்கை, டவுன்லோட்கள் அதிகரித்துள்ளதை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறது. இது குறித்த பதிவில், “கடந்த மூன்றே நாட்களில் வந்துள்ள ஒரு மில்லியன் புது பயனர்களை வரவேற்கிறோம்,” என்று புளூஸ்கை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜே கார்பர் வெளியிட்டுள்ள பதிவில், “பிரேசில், புளூஸ்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஆக்டிவிட்டியை பதிவு செய்து வருகிறீர்கள். சிறப்பான விஷயம் பிரேசில், நீங்கள் சரியானதை தேர்வு செய்துள்ளீர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி யோசனையில் உருவான தளம் தான் புளூஸ்கை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எக்ஸ் தளத்திற்கு மாற்றாக ஐஒஎஸ் தளத்தில் மட்டும் புளூஸ்கை கிடைக்கிறது.
 
																	
																															
 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
									 
																	 
											 
											 
											 
											 
											 
											 
											 
											