Cricket
ஐசிசி தலைவரான ஜெய் ஷா.. கம்பீர், ஹர்திக் பாண்டியா கூறியது இதுதான்..!
பிசிசிஐ தலைவராக உள்ள ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். போட்டியின்றி ஐசிசி தலைவர் பதவியை ஏற்கவுள்ள ஜெய் ஷாவிற்கு பலருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இளம் வயதில் ஐசிசி தலைவர் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய் ஷாவிற்கு வாழ்த்துகள் குவிகின்றன.
அதன்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிற்கு வாழ்த்துக்கள்,” என தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவும் கம்பீர், “ஜெய் ஷா பாய்க்கு வாழ்த்துக்கள். உங்களது தனித்துவ வழிகாட்டுதலில் உலக கிரிக்கெட் பல மடங்கு வளர்ச்சியை பெறும் என்று எனக்கு நிச்சயமாக தெரியும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹர்திக் பாண்டியா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஐசிசியின் இளம் வயது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய் ஷாவிற்கு வாழ்த்துக்கள். நீங்கள் கிரிக்கெட்டை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வதை பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன். உங்களது பணி மற்றும் கனவு, பிசிசிஐ-யை வளர்ச்சி பாதையில் பயணிக்க செய்ததை போன்று ஐசிசி-யையும் கொண்டு செல்லும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “இதுவரை இல்லாத அளவுக்கு 35 வயதிலேயே, ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய் ஷாவிற்கு வாழ்த்துக்கள். பிசிசிஐ-ஐ வழிநடத்திய அனுபவம் அவருக்கு சந்தேகமின்றி பயன்தரும். உலக கிரிக்கெட் மற்றும் ஐசிசி அதன் முழு திறமையை வெளிக்கொண்டு வேறொரு பரிணாமத்தை அடைவதற்கு ஜெய் ஷா கடினமாக உழைப்பார் என்று கிரிக்கெட் சமூகம் நிம்மதி கொள்ளலாம்,” என்று தெரிவித்தார்.